🌷🌷🌷அபூர்வ தை அமாவாசை...முன்னோரை வணங்கி வளம் பெறுவோம்!🌷🌷🌷


🐚அன்பு முகநூல் நண்பர்கள் இந்த தை அமாவாசை பற்றிய நீங்கள் பார்த்தது மட்டும் இல்லாமல் பிறருக்கும் பகிர்ந்து மகிழுங்கள் சர்வம் சிவார்ப்பணம்🐚🐚🐚


நாளை தை அமாவாசை. அதோடு எப்போதாவது ஒரு முறை அபூர்வமாக வாய்க்கும், பல புண்ணிய பலன்களை அளிக்கும் ஶ்ரீ மகோதய புண்ணிய காலம் சேர்ந்து வருகிறது. அமாவாசை அன்று முன்னோரை வழிபடுவது  மிகவும் விசேஷம்.  அதோடு மகோதய புண்ணியகாலமும் சேர்ந்து வருவதால் மிகமிகக் கூடுதல் சிறப்பு வாய்ந்தது.

நம் முன்னோர்கள் ஓர் ஆண்டில் வரும் புண்ணியகாலங்களை வகுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பும், அமாவாசையும் புண்ணியகாலங்கள் என்கின்றன சாஸ்திரங்கள். சில மாதப் பிறப்புகள் பண்டிகைகளாகவும் கொண்டாடப்படும். இந்தப் புண்ணியகாலங்கள் அனைத்தும் முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த நாள்கள்தான். குறிப்பாக ஆடி, புரட்டாசி, தை ஆகிய மூன்று மாதங்களில் வரும் அமாவாசைகளில் சமுத்திரத்தில் நீராடி நீர்க்கடன் செலுத்துவது சிறப்பு.

நம் மரபில் முன்னோர் வழிபாடு சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளது. புராண இதிகாசங்களில் அதன் சிறப்பு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வல்லாளன் என்னும் பிள்ளையில்லா பக்தனுக்கு திருவண்ணாமலையாரும், லட்சுமி நாராயணர் என்ற பக்தனுக்கு குடந்தை சாரங்கபாணிப் பெருமாளும்  ஆண்டுதோறும் திதி கொடுப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. முன்னோர் வழிபாட்டின் மேன்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இறைவனே இத்தகைய லீலைகளைப் புரிந்திருக்கிறார். 

ஒரு காலத்தில் ஜரத்காரு என்ற ரிஷி வாழ்ந்துவந்தார். அவர் ஒரு பிரம்மச்சாரி. அவர் சிறுவயதுமுதலே இறைச் சிந்தனையில் வாழ்ந்ததால் அவருக்கு இல்லறத்தில் கவனம் செல்லவே இல்லை. நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்துக்குச் செல்லும் வல்லமை படைத்தவர். எப்போதும் பயணம் செய்துகொண்டேயிருக்கும் ஜரத்காரு ஒருநாள் இருட்டான பாதையில் நடந்து போனார். அப்போது சன்னமாகக் குரலில் பலர் முனகுவது கேட்டது. ஜரத்காரு யார் முனகுவது என்று உற்று நோக்கினார்.



ஆத்மாக்கள் சில பலவீனமாகக் குரல் எழுப்பிக்கொண்டிருந்தன. அவை ஒரு வேரைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தன. அந்த வேரும் இற்றுவீழும் நிலையில் இருந்தது. அந்த வேர் அறுந்தால் அவர்கள் நரகத்து நெருப்பில் விழும் நிலையில் இருந்தார்கள். ஜரத்காரு அவர்களிடம், 'நீங்கள் யார் ? உங்களுக்கு ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது?' என்று கேட்டார்.

அதற்கு அந்த ஆத்மாக்கள், " பாவாத்மாக்களாகி இருளில் கிடக்கும் எங்களுக்கு அன்னமும், நீரும் வார்க்கச் சந்ததியில்லை. இருக்கும் ஒரே மகனும் இல்லறத்தில் ஈடுபடாதிருக்கிறான். அதனால் நாங்கள் பசியிலும் தாகத்திலும் தவிக்கிறோம்" என்று சொன்னார்கள்.

அதற்கு ஜரத்காரு, "அப்படியா, தங்களைத் தவிக்கவிட்ட மகன் யார்?" என்று கேட்டார். அதற்கு  அவர்களோ, "அவனைக் குறை சொல்ல விரும்பவில்லை. காரணம் அவன் சத்யசந்தன். அவன் பெயர் ஜரத்காரு" என்று சொல்லக் கேட்டு ஜரத்காரு வருத்தமடைந்தார். தன்னால் அவர்கள் வாடும் நிலை ஏற்பட்டதை நினைத்து வருந்தினார். பின் தனக்கு இணையான பெண்ணைத் தேடி மணந்து தன் பித்ரு கடனைத் தீர்ப்பதாக வாக்களித்தார். அதன்படி அவர் திருமணம் செய்து தன் கடமைகளை நிறைவேற்றினார்.  இந்த நிகழ்வு மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்னோர் வழிபாட்டின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம். அதன் மூலம் அவர்களுக்கு நற்கதி கிட்டுவதோடு நமக்கும் நம் சந்ததிக்கும் வாழ்வில் வளங்களும் சேரும்.



பொதுவாக அமாவாசை அன்று தர்பணம் செய்வது வழக்கம். எல்லா அமாவாசையிலும் அதை நிறைவேற்றத் தவறியவர்கள் அல்லது வழிபாட்டில் ஈடுபடமுடியாதவர்கள், நாளை அதைச் செய்து பலன் பெறலாம். அமாவாசை ஞாயிறன்று வந்து அன்று திருவோணம், அவிட்டம், அசுவினி, திருவாதிரை, ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களோடு சேர்ந்துவந்தால் அதை  'வ்யதீபாதம் புண்ணியகாலம்' என்பார்கள். இந்த நாள் நூறு சூரியகிரகணங்களின் போது முன்னோரை வழிபட்ட பலன் கொடுக்கும். அதுவே குறிப்பாக தை அல்லது மாசிமாதங்களில் நிகழ்ந்தால் இதை  'அர்த்யோதய புண்ணியகாலம்' என்றும் திங்கள் அன்று நிகழ்ந்தால் 'மகோதய புண்ணியகாலம்'என்றும் குறிப்பிடுவர். இந்த நாள்களில் நதிகளில் அல்லது சமுத்திரத்தில் நீராடி முன்னோர் வழிபாடும் இறைவழிபாடும் செய்ய, கோடி சூர்யகிரகணத்தன்று வழிபாடு செய்த பலன்கள் கிட்டும் என்கின்றன சாஸ்திரங்கள்.



அப்படி ஒரு மகோன்னதமான புண்ணியகாலம் நாளை நமக்கு வாய்த்திருக்கிறது. வழக்கமாக,  ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், தனுஷ்கோடி தவிர்த்த பிற சமுத்திரங்களில் எல்லா நாள்களிலும் நீராடுதல் பரிந்துரைக்கப் படவில்லை. ஆனால் புண்ணிய காலங்களில் எல்லா நதிகளிலும் எல்லா சமுத்திரங்களிலும் நீராடலாம். அவ்வாறு நீராடி கரைகளிலேயே அமர்ந்து தர்பணம் முதலிய நீர்க்கடன்களைச் செய்துப் பின் முன்னோர்களை வழிபடவேண்டும். வசதி உள்ளவர்கள் வறியவர்களுக்கு உணவு, உடை தானங்கள் செய்யலாம். அவ்வாறு தானம் செய்வது செய்பவரின் முன்னோரையே சென்று சேரும் என்று நம்பப்படுகிறது. எனவே நாளை அபூர்வமாக வாய்த்திருக்கும்  மகோதய புண்ணியகாலத்தில் வழிபட்டு முன்னோரின் அருளைப் பெறலாம்.






Comments

Popular posts from this blog