தோல் நோய் தீா்த்த திருத்துருத்தி
👥 தோல் நோய் தீா்த்த
திருத்துருத்தி. 👥
மயிலாடுதுறையில் இருந்து தென்மேற்கே 10 கிலோமீட்டர், கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் நெடுஞ்சாலையிலேயே உள்ள ஊர் குத்தாலம். ஊரின் நடுவிலேயே அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடல் பெற்ற தேவாரத் தலமான உத்தவேதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. பேருந்தை விட்டு இறங்கிய உடன் நடக்கும் தூரத்தில் உள்ளது ஆலயம். நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி ‘துருத்தி’ என வழங்கப்படுவது இயல்பு. காவிரியின் தென்கரையில் சிறப்பு பெற்ற ஊராக இருப்பதால் திருத்துருத்தி என்று பெயர் பெற்றுள்ளது.
உத்தால மரம் :
பழங்காலத் திருக்கோவிலின் மேற்கு நோக்கிய ராஜகோபுரத்தைக் கடந்து சென்றால், எதிரே இருப்பது கோவிலின் தல விருட்சமான உத்தால மரம். இது ஒரு வகை ஆத்தி மரம் ஆகும். மரத்தின் அருகில் உள்ள மேடையில் ஒரு ஜோடி காலணிகள் வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.
சிவபெருமான் கயிலாயத்தில் இருந்து உமாதேவியை நிச்சயம் செய்ய இத்தலத்திற்கு வந்த போது, உடன் நிழல் கொடுப்பதற்காக தொடர்ந்து வந்த உத்தால மரத்தையும், காலணிகளையும் ஈசன் இங்கேயே விட்டுச் சென்றதாக ஐதீகம். உத்தாலம் என்பது தான் குத்தாலம் என்று மருவியதாக ஒரு வழக்கு உண்டு.
உத்தவேதீஸ்வரர் :
மூலவர் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கியபடி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவர் ‘உத்தால ஈசுவரர்’ எனவும், ‘உத்தவேதீஸ்வரர்’ எனவும், சொன்னவாறறிவார் பெருமான் எனவும் புகழப்படுகிறார். ராஜகோபுரம் அருகிலேயே தெற்கு பார்த்த தனிக் கோவிலில் அம்பிகை வீற்றிருக்கிறார். நின்ற கோலத்தில் காட்சி தரும் அன்னையை, ‘அரும்பன்ன வனமுலை நாயகி’ என்ற பெயரில் அழைக்கிறார்கள்.
இந்தத் திருத்தலத்தில் இறைவன் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.
உருத்திரன்மர் என்பவரை காசிக்குச் செல்லவிடாமல், ‘இத்தலமே காசிக்கு நிகரானது’ என்று பாம்பாட்டியாக சிவன் வந்து காட்சி தந்ததாக ஒரு வரலாறு உண்டு.
புராணச் சிறப்பு :
பரதமா முனிவரின் கடுந்தவத்தால் பராசக்தி அவருக்கு மகளாகப் பிறந்தாள். சிவபெருமானைக் கணவனாக அடைய இத்தலத்துக் காவிரிக் கரையில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டாள் அம்பிகை. இறைவன் தோன்றி அம்பிகையின் கரம் பற்ற முற்பட்டபோது, ‘என்னை வளர்த்த பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று கூறினாள்.
இதையடுத்து நந்தியை அழைத்து, பரதமா முனிவரிடம் சென்று திருமணம் பற்றி பேசி வரும்படி அனுப்பிவைத்தார் ஈசன். நந்தியும் முனிவரை சந்தித்து ஈசனுக்கு, அம்பாளை மணம் முடித்துக் கொடுக்கும்படி கேட்டார். பெருமகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார் பரதமா முனிவர். இதையடுத்து இறைவனுக்கும், அம்பாளுக்கும் நடந்த திருமண நிச்சயம், இந்த ஆலயத்தில் நடைபெற்றது என்றும், அதன்பிறகு அருகில் உள்ள திருமணஞ்சேரியில் திருமணம் நடைபெற்றது என்றும் சொல்கிறார்கள்.
இதற்காக கயிலாயத்தில் இருந்து ரிஷப வாகனத்தில் சிவபெருமான் வந்தபோது, விநாயகர் முன்செல்ல, ‘உத்தாலம்’ என்னும் மரம் சிவனுக்கு நிழல் தந்தபடியே பின் தொடர்ந்து வந்தது. அந்த மரமும், ஈசன் அணிந்து வந்த பாதுகையும் தான் இந்த ஆலயத்தில் இருப்பதாக தல புராணம் எடுத்துரைக்கிறது.
இத்தல இறைவனையும், அம்பிகையையும் வழிபட்டால் திருமணத் தடை நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும், சிவனுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கிறார்கள். அர்ச்சனை செய்து வழிபட்டு சுவாமி, அம்பாளுக்கு சூட்டிய மாலையை அணிந்து கொண்டால் திருமணத் தடை நீங்கும்.
உள்பிரகாரத்தை வலம் வரும்போது தனிச் சன்னிதியில் சனீஸ்வரரும், அவருக்கு நேர் எதிரில் விநாயகர் சன்னிதியும் உள்ளன. சனி தோஷம் உள்ளவர்கள் பிரார்த்திக்க ஏற்றத் தலம் இதுவென சொல்லப்படுகிறது.
காசிப முனிவர், கவுதமர், ஆங்கீரகர், புலத்தீயர், மார்க் கண்டேயன், அகத்தியர், வசிஷ்டர் ஆகிய சப்த முனிவர்களும், வருணன், காளி, அக்கினி பகவான், காமன் ஆகியோரும் இங்கே வந்து இறைவனை வணங்கியுள்ளனர்.
விக்கிரம சோழ மன்னனின் மனைவி கோமளை என்பவளின் தொழு நோய் இந்தத் தல இறைவனின் அருளால் நீங்கியதாக தல வரலாறு கூறுகிறது. மேலும் இறைவனின் தோழரும், நாயன்மார்களில் ஒருவருமான சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தோல் நோய் தீர்த்த தலமும் இதுதான்.
சுந்தரர் தீர்த்தம் :
திருக்கோவிலின் முன்புறம் படிக்கட்டுகளுடன் கூடிய ஆழமான தீர்த்தக்குளம் உள்ளது. இது ‘சுந்தரர் தீர்த்தக்குளம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த குளத்தின் அருகில் சுந்தரருக்கு சிறிய கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது. சுந்தரர் இத்தல இறைவனை வேண்டி பதிகம் பாடி தன் தோல் நோய் நீங்க வேண்டினார்.
பின்னர் இறைவனை நினைத்தபடி ஆலயத்தில் அமைந்திருந்த தீர்த்தக்குளத்தில் நீராடினார். நீரில் மூழ்கி எழுந்தபோது அவரது தோல் நோய் முற்றிலுமாக குணமாகி இருந்தது. இதையடுத்து இந்த தீர்த்தம், அவரது பெயரிலேயே அழைக்கப்படலாயிற்று.
மனத்தூய்மையுடன் திருத்துருத்தி சிவாலயத்தில் உள்ள சுந்தரர் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து, சுந்தரர் பாடிய பதிகத்தை பாடி சுவாமியையும், அம்பாளையும் உருகி வேண்டிக்கொள்ள வேண்டும். பிறகு சிவனை நினைத்து திருநீற்றினை உடல் முழுவதும் அணிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு 48 நாட்கள் செய்து வந்தால், சரும நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. 48 நாட்களும் ஆலயத்திற்கு வர முடியாதவர்கள், முதல் நாளிலும், கடைசி நாளிலும் வந்து வழிபடலாம். மற்ற நாட்களில் இல்லத்தில் இருந்தபடியே சுந்தரரின் பதிகத்தை பாடியபடி இறைவனை நினைத்து வழிபாடு செய்யலாம்.
Comments
Post a Comment