🌷பங்குனி உத்திரம் 2019 – முருகன் தெய்வானை திருக்கல்யாணம் பார்க்க திருப்பரங்குன்றம் வாங்க🐚


திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் சிறப்பு வாய்ந்த பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 15 நாட்கள் கொண்டாடப்படும் பங்குனி பெருவிழாவின் முக்கிய அம்சமான முருகன் தெய்வானை திருக்கல்யாணம் வரும் 23ஆம் தேதி மதுரை மீனாட்சி சொக்கநாதர் முன்னிலையில் நடைபெறுகிறது.

ஞானத்தின் வடிவான முருகப்பெருமான் கிரியாசக்தியை தன்னோடு இணைத்துக்கொள்ளும் தெய்விக நிகழ்வே முருகன் தெய்வானை திருமணம். 'நான்முகன் வேதம் ஓத, சூரிய சந்திரர்கள் தீபங்கள் ஏந்தி நிற்க, சிவ சக்தியர் ஆசி வழங்க, இந்திரன் தெய்வானையைத் தாரை வார்த்துக் கொடுக்க, சுப்பிரமணியக் கடவுள் தெய்வானையைத் திருமணம் செய்துகொண்டார்' என்று முருகப் பெருமானுக்கும் தெய்வானைக்கும் நடைபெற்ற திருமணம் பற்றி திருப்பரங்குன்றம் தலபுராணம் விவரிக்கிறது.
தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோயில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றுவது. எங்கெல்லாம் முருகன் கோயில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவுதான் நமக்கு வருகிறது.


15 நாட்கள் திருவிழா
திருப்பரங்குன்றத்தில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் பங்குனி உத்திரத் திருவிழா தொடர்ந்து வருகிற 26ஆம்தேதி வரை 15 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 16ஆம்தேதி கைப்பாரமும், 20ஆம்தேதி பங்குனி உத்திரமும், 21ஆம்தேதி சூரசம்ஹார லீலையும், 22ஆம் தேதி பட்டாபிஷேகமும், 23ஆம் தேதி திருக்கல்யாணமும், 24ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.








திருக்கல்யாணம் காண வாங்க
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முருகன் தெய்வானை உடன் மணக்கோலத்தில் மூலவராகக் காட்சியளிக்கும் ஒரே தலம் முதற்படை வீடான திருப்பரங்குன்றம்தான். முருகன் தெய்வானை திருக்கல்யாணம் பங்குனி உத்திர விழாவில் 11ஆம் நாள் நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் கோயில் ஆஸ்தான மண்டபத் தூணில் தெய்வானை கல்யாணக் காட்சியைக் கண்டு மகிழலாம். இந்திரன் கன்னிகாதானம் அளிக்கும் கோலத்தில் உள்ளார்.

மீனாட்சி சொக்கநாதர் முன்னிலை
முருகன் தெய்வானை திருமணத்தில் பங்கேற்க மதுரையில் இருந்து மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுந்தரரேசுவரர் பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மகனின் திருமணத்திற்காக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் வருவதால் அன்றைய தினம் மாலை வரை கோவில் நடை அடைக்கப்படும். திருக்கல்யாணத்திற்காக சோலைமலை முருகப்பெருமான் கோவிலில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசை கொண்டு வரப்படுகிறது.

மார்ச் 15ல் கொடியேற்றம்
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனியில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மார்ச் 20ம்தேதியும் மார்ச் 21ஆம் தேதி பங்குனி உத்திர தினத்தன்று தேரோட்டமும் நடைபெறுகிறது.

முருகனை குளிர்விக்க தீர்த்தம்
தமிழ் மாதத்தின் 12 மாதமான பங்குனியில் 12 நட்சத்திரமான உத்திரம் இடம் பெறும் புனித நாள்தான் பங்குனி உத்திரமாகும். பல்வேறு சிறப்புகளையும், பெருமைகளையும் பெற்ற பங்குனி உத்திர திருவிழா "பிரமோற்சவ விழா" எனவும் அழைக்கப்படுகிறது. கடும் கோடை வெப்பம் தொடங்கியுள்ள பங்குனி மாதத்தில் முருகபக்தர்கள் முருகனை குளிர்விக்கும் பொருட்டு கொடுமுடி சென்று காவிரி ஆற்று நீரை தீர்த்த காவடியாக எடுத்து வந்து அபிஷேகம் செய்வது, தொன்று தொட்டு நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாகும். பங்குனி உத்திர திருவிழா நாளன்று பல லட்சம் பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்து, முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.



முருகன் தெய்வானை திருக்கல்யாணம்
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சுவாமி - அம்பாள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். மார்ச் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கி 16ஆம் தேதி சனிக்கிழமை சுவாமி- அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்தில் வீதி உலா வருகின்றனர். 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்திலும், 18ஆம் தேதி திங்கள் கிழமை தங்க மயில் வாகனத்திலும் 19ஆம் தேதி செவ்வாய் கிழமை யானை வாகனத்திலும், 20ஆம் தேதி புதன்கிழமை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகன் தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.








பழனியில் தேரோட்டம்
இதை தொடர்ந்து சுவாமி -அம்பாள் வெள்ளி ரதத்தில் வீதியுலா வருகின்றனர். 21ம் தேதி தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. 22ம் தேதி வெள்ளிக்கிழமை தங்க குதிரை வாகனத்திலும், 23ம் தேதி சனிக்கிழமை வெள்ளிப்பிடரி மயில் வாகனத்திலும், மார்ச் 24ம் தேதி கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.







Comments

Popular posts from this blog