🔔🔔🔔திருப்பந்துறை சிவானந்தேசுவரர் கோயில்

பேச்சுக் குறைபாடு நீக்கும் திருக்கோலக்கா திருத்தலம்🔔🔔🔔





விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள ஒலிக்குறிப்புகளே உதவுகின்றன. வாய்திறந்து, மொழி வாயிலாக பேசவும், பாடவும் இயலக்கூடிய உயிரினம் மனிதன் மட்டும்தான். ‘மனித குலத்துக்கு கிடைத்த இந்த அற்புதமான வரத்தை, எல்லோரும் பெற்று விட்டார்களா?’ என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


சிலருக்கு பிறவிலேயே பேச்சு இல்லாமல் போகிறது. வார்த்தைகளை தட்டுத்தடுமாறி பேசுபவர்களும் உண்டு. நோய், விபத்து போன்ற காரணங்களால் இடையில் பேச்சை இழந்தவர்களும் இருக்கிறார்கள்.


நோயின் தன்மைக்குத் தக்கபடி மருத்துவமும், பயிற்சிகளும் இருப்பினும், தெய்வத்தை நம்பி அதற்கேற்ற கோவில்களுக்கு வந்து கை தொழுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

                   💰💰💰💰திருத்தல மகிமை :💰💰💰

பிறந்தாலே முக்தி தரும் திருவாரூரில் இருந்து கிழக்காக 3 கிலோமீட்டர் சென்றால், விளமல் என்ற ஊர் உள்ளது. திருவிளமர் என்ற பெயரில் விளங்கிய இந்தச் சிற்றூரில், சம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற சிவாலயம் ஒன்று இருக்கிறது. திருக்கோவிலில் சுயம்பு வடிவாக மூலவர் பதஞ்சலி மனோகரர், கிழக்கு நோக்கி அருள்பாலித்து வருகிறார்.

ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன், பதஞ்சலி முனிவராக வடிவெடுத்து, சிவபெருமானின் திருநடனம் காண தவம் இருந்தார். அவருக்கு இந்த ஆலயத்தில் அஜபா நடனம் ஆடி திருப்பாதம் காட்டியருளினார் ஈசன். ஆகவேதான் பதஞ்சலியின் பெயரிலேயே இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். மண்ணால் உருவான இத்தல சிவலிங்கம், தீபாராதனையின் போது கண்ணாடி போல் பிரதிபலிப்பதைக் காணலாம்.

தென்முகம் பார்த்த சன்னிதியில் நான்கு கரங்களுடன் வீற்றிருக்கிறார் பராசக்தி மதுரபாஷிணி அம்மன். தமிழில் ‘யாழினும் மென் மொழியம்மை’ என்று புகழப்படுகிறார். அம்பிகைக்கு தேன் அபிஷேகம் செய்வது சிறப்புக்குரியதாகும். அபிஷேகம் செய்த தேனை, பள்ளி செல்லும் குழந்தைகளின் நாவில் தடவினால், அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.

பேச்சுத்திறனில் குறைபாடு உள்ளவர்களும், நா குழறுபவர்களும், இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி அம்பிகையை உள்ளம் உருக வழிபட்டு, அபிஷேகத் தேனை தினமும் பக்தியுடன் சுவைத்தால் குறைகள் தீரும். அமாவாசை நாளில் இத்தல தீர்த்தத்தில் மூழ்கி, சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்தால், பிதுர் தோஷம் விலகும் எனவும், மோட்ச தீபம் ஏற்றினால், ஆன்மா அமைதியுறும் என்பதும் இத்தல சிறப்புகளாகும்.

இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கை, வலது கையில் திரிசூலமும், இடக்கையில் கிளியும் ஏந்தி, சிம்ம வாகனத்தில் காட்சி யளிக்கிறார். தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

📱தொடர்பு எண்📞 9489479896 , 📱99769659999


                       💿திருக்கோலக்கா💿


திருஞான சம்பந்தர் அவதரித்த சீர்காழிக்கு மேற்கே 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்கோலக்கா திருத்தலம்.


மூன்று வயதில் உமையம்மையின் ஞானப்பால் அருந்தி, பதிகம் பாடத் தொடங்கிய சம்பந்தர், கோவில்கள் தோறும் சென்று பாடல்களைப் பாடி வந்தார். அதன் ஒரு பகுதியாக திருக்கோலக்கா வந்து கையால் தட்டி தாளமிட்டு பாடிக்கொண்டிருந்தார். அப்படி தாளம் போடும்போது, அந்தப் பிஞ்சுக் கைகள் வலிக்குமே என்று நினைத்த ஈசன், அவருக்கு பொன்னால் ஆன தாளங்களை வழங்கி அருளினார். அதை சம்பந்தர் தட்டியபோது ஓசை வரவில்லை.


பிறகு இத்தலத்தில் கிழக்கு பார்த்த தனிச்சன்னிதியில் அருளும், அம்பிகை அந்த தாளத்திற்கு ஓசை கொடுக்க, அதில் இருந்து இனிய இசை பிறந்தது. இத்தல இறைவன் சப்தபுரீஸ்வரர் என்றும், தாளமுடையார் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி ‘ஓசை கொடுத்த நாயகி’ என்று வணங்கப்படுகிறார்.





பேச்சு சரியாக வராதவர்கள், குரலில் இனிமை வேண்டுபவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து ஆனந்த தீர்த்தத்தில் நீராடி, இறைவிக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். பின்னர் அந்த அபிஷேகத் தேனை நாவில் தடவினால் வேண்டியது நிறைவேறும் என்பது நம்பிக்கை.



                     🏮திருப்பந்துறை🏮


திருப்பேணு பெருந்துறை என்று சம்பந்தரின் தேவாரப் பாடல்களிலும், திருப்பந்துறை என்று பேச்சுவழக்காகவும் அழைக்கப்படும் சிவத்தலம் இது. இந்த ஆலயம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் என்ற தலத்துக்கு வட கிழக்கே 3 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.


மூன்று நிலை ராஜகோபுரத்துடன் விளங்கும் இந்த ஆலயத்தின் மூலவர் ‘சிவானந்தேஸ்வரர்’ என்றும், ‘பிரணவேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். தெற்கு நோக்கிய சன்னிதியில் அம்பாள் மங்களாம்பிகையாக அருள்பொழிகிறார்.


தலையில் குடுமியுடன், சின்முத்திரை காட்டி கண் மூடி மவுனியாக நிற்கும் ஞான தண்டாயுதபாணி பெருமான், வடக்கு திசை நோக்கி அருள்கிறார்.


‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்துக்குப் பொருள் கூறாத காரணத்தால், பிரம்மனைச் சிறையிலடைத்துப் பின் தந்தைக்கு உபதேசம் செய்தார் முருகப்பெருமான். ஈசனுக்கு நிபந்தனை விதித்ததால் முருகன் மவுனியாகி விட்டதாகவும், பின்னர் இத்தல பிரணவ ஈஸ்வரனை பூஜித்ததும், மவுனம் கலைந்து பேசியதாகவும் தல புராணம் சொல்கிறது.


எனவே பேசவராத குழந்தைகள், பாதியில் பேச்சு நின்றவர்கள் இத்தலம் வந்து, இரட்டை விநாயகர் வீற்றிருக்கும் மங்கள தீர்த்தத்தில் நீராடி, பின்னர் ஞான தண்டாயுதபாணிக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். மேலும் இறைவனையும், இறைவியையும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.


பின்னர் அபிஷேகத் தேனை நாவில் தடவிக் கொண்டு, கோவிலில் சொல்லிக் கொடுக்கும் மந்திரத்தை, 48 நாட்கள் ஜெபித்தால், வார்த்தைகள் தங்குதடையின்றி வெளிப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும

 🔔🔔🔔🔔ஓம் வாம தேவாய நம:🔔🔔🔔




Comments

Popular posts from this blog