🌏எண்ணங்கள் ஒரு விதை🌍

 🌏எண்ணங்கள் ஒரு விதை🌍



🌍எண்ணம் ஒரு விதை🌍🌏🌎

எண்ணங்களே செயல்களாகப் பரிணமிக்கின்றன. ஒரு பழகத் விஷயத்தைப்பற்றித் தினமும் யோசித்துக் கொண்டிருந்தோ மானால், நாம் அந்த எண்ணத்துடன் துவங்கிவிடுவோம். நாளடைவில் அந்த எண்ணத்தில் நியாயம் இருப்பதாகப்படும். 'ஏன் செய்யக்கூடாது? என்ன தவறு?' என்ற எண்ணம் வேர் விடும்.

நல்ல எண்ணமும் அப்படித்தான்; கெட்ட எண்ணங் களும் அப்படித்தான். எண்ணம் ஒரு தீப்பொறிபோல. ஒரு தீப்பொறி விழுந்ததும் முதலில் கனிகிறது; பின் புகைகிறது; பின் 'ஓகோ' என்று எரிகிறது. எண்ணமும் அப்படித்தான்.

'திருடினால் என்ன?' என்று எண்ணத் துவங்கும் ஒரு மனம் நாளடைவில் திருடுவதற்கான காரணங்களைச் சொல்லி சமாதானப்படுத்துகிறது. பின் எப்படித் திருடுவது என்று மனிதன் திட்டமிடுகிறான். பின் எங்கே திருடுவது என்று தீர்மானிக்கிறான். நாளடைவில், திருட்டு எண்ணம் செயலைத் தூண்டுகிறது. மனிதன் திருடனாகிறான். அவன் திருடனான காரணம் புறச் சூழ்நிலைகள் அல்ல. அவன் மனம் - மனதில் பிறந்த ஓர் எண்ணம். ஒரு முறை திருடியவன், சிறையிலிருந்து வெளியே வந்ததும், எண்ணப் பழக்கம் மீண்டும் அவனைக் குற்றம் செய்யத் தூண்டுகிறது. எண்ணங்கள் வலிமை மிக்கவை. இதே போலத்தான் பொறாமையும், பிறர் மனைநயக்கும் பேதையர் உள்ளமும், மதுவின் போதையும், எல்லாம் எண்ணம். எண்ணப் பழக்கம். எண்ணம் இலேசாக மனதில் ஊன்றி, பழக்கத்தினால் வலிமை பெற்று, பின் விசுவரூபமெடுக்கிறது.

Om Ravikumar 

"திருடன் மகன் திருட முயலும்போது அவன் என்ன நினைப்பான் என்பதை எண்ணிப்பாருங்கள்" என்றார் ஒரு முறை டாக்டர் மு.வ. திருடுவது நியாயம் என்றுதான் எண்ணுவான்.

எண்ணத் தோட்டங்கள்-அங்கிருந்துதான் எருக்கும் கிளம்புகிறது. மல்லிகையும் மலர்கிறது.

பண்படுத்தப் படாத தோட்டத்தில் கரம்பும் காளானும், எருக்கும் முளைக்கின்றன. பண்படுத்திச் சரியான விதை யிட்ட செடி நட்ட தோட்டத்திலிருந்து மல்லிகையும் முல்லையும் ரோஜாவும் மலர்கின்றன. என்ணங்கள் விதைகள்; அவை காற்றில் மிதக்கின்றன. மனம் ஒரு தோட்டம். நாம்தான் தோட்டக்காரன். என்ன விதையைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது, என்ன விதமான தோட்டத்தை நாம் விரும்புகிறோம் என்பதைப் பொறுத்தது.

பலர் இனிய மலர்ந்த தோட்டத்தை விரும்புவார்கள்; அதன் மணமே தனி. பலர்சுவை நிறைந்த பழத்தோட்டத்தை விரும்புவார்கள். அதன் ருசியே தனி. பலர் சவுக்கு மரம் பயிரிடுவார்கள்- விறகுக்கு. பலர் தேக்கும், தேவதாரும் பயிரிடுவார்கள். அவை நீண்ட நாள் வாழும், நெடிதுயர்ந்து நிற்கும் காட்சி நெஞ்சை நிறைக்கும்.

நான் பல தேக்கு, தேவதாரு மரங்களில் சுவை மிகுந்த கனிகளையும், மணம் நிறைந்த மலர்களையும் வாசம் மிகுந்த சந்தனத்தையும் கண்டிருக்கின்றேன். அத்தகைய அசாதாரண அற்புதங்களை காந்தியாகவும், நேருவாகவும், பாரதியாகவும், அண்ணாவாகவும் கண்டு அதிசயித்ததுண்டு. நம்மிடையே இன்று வாழும் பல தலைவர்கள் என்னை அதிசயத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள். திருமதி காந்தியின் துணிச்சல், காமராஜரின் நாணயம்,

தொழில் மேதை சிதம்பரத்தின் திறமை, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் காட்டும் நாத உலகம், சிந்தையில் பதியுமுன் கமலா செதுக்கும் சிற்ப நாட்டியம், எம். எஸ். இசைக்கும் தெய்விகம்-என் எண்ணங்கள் உணர்ச்சிவசப்படுகின்றன.

இவர்களைப் பார்க்கும்போது என் உள்ளத்தில் வியப்பும், மலைப்பும், பிரமிப்பும் ஏற்படும். அது கலைந்ததும் நான் பூமிக்கு வருவேன். இத்தகைய மகத்தான சாதனை புரியும் திறமைகளை இவர்கள் எங்கே பெற்றார்கள், எங்கே கற்றுக்கொண்டார்கள் என்று நானே கேட்டுக்கொள் வேன். சில சமயம் காந்தியின் சுயசரிதை பேசும்; நேருவின் வரலாறு கதை சொல்லும். சில சமயம் எனது சொந்த கற்பனை என்னுடன் பேசும்.

போயும் போயும் ஒரு குக்கிராமத்தில் பிறந்த இவர், பள்ளியில் தேற முடியாமல் திண்டாடிய இவர், இக்கட்டான சம்பவங்களைச்சமாளிக்க முடியாமல் திணறிய இவர், இன்று இத்தனை பெரிய தலைவராய் - மேதையாய் எப்படி ஆனார்? என்று உள்ளம் துழாவும்.

பேச்சு மேடையிலிருந்தோ, கச்சேரியிலிருந்தோ சில சமயம் நினைவுகளை வீட்டுக்கு எடுத்துச்செல்வேன். சில சமயம் கல்லூரிக்குச் சென்று 'மைக்ராஸ்கோப்' பின் அடியில் வைத்துப் பார்ப்பதுண்டு. சில சமயம் எனது ரசாயன சோதனைக்கூடத்திற்கு எடுத்துச் சென்று, அவற்றைச் சோதனைக் குழாயிலிட்டுக் கலக்கிக் குலுக்கி, சூடுபடுத்தி வடிக்க முயல்வதுண்டு.

எல்லாவற்றிலும் எல்லா மேதைகளிடமும் தலைவர் களிடமும் நான் கண்ட அணுத்துகள் - அடிப்படைத்துகள், எண்ணங்கள், எண்ணங்கள்-ஆசைகள், ஆசைகள் - ஒரு துடிப்பு,ஓர் ஆர்வம், வெறி, உழைப்பு. அடிப்படைத்துகள்கள் பல நிலையில் சேர்ந்து பல பொருள்களாக இப்பிரபஞ்சத்தை உண்டாக்கியிருப்பது போல, இவர்களது எண்ணங்கள் பல கூட்டுத்தொகுப்பாக மலர்ந்து பரிணமிப்பதைக் கண்டேன். எண்ணங்களின் கூட்டுத்தொகுப்பு ஆசையாகவும்

நம்பிக்கையாகவும், உழைப்பாகவும் மாறி 'மேதை-தலைவன்' என்று ஒளிடுவதை காண்கிறோம். அத்தகையோரால் உலக சரித்திரமே உலகில் மாற்றி எழுதப்படுகிறது. ஆம்! எண்ணங்கள் உலகை ஆள்கின்றன.

கனியைப் பார்க்கும் ஒருவன், அதன் ருசியைச் சுவைக்கிறானே தவிர, விதையைப் பற்றி எண்ணுவதில்லை. மலரை நுகரும் ஒருவன், அது வளர்ந்த விதத்தைப்பற்றி அக்கறைப்படுவதில்லை. அப்படித்தான் மேதைகளிடம் எண்ணங்களின் முடிவு நிலை கண்டு நாம் மனதைப் பறிகொடுக்கிறோம். பல சமயம் 'அதிர்ஷ்டக்காரன்' என்று நமது பொறாமையைத் தெரிவித்துக்கொள்கிறோம். 'எல்லாம் அப்படி அமைந்தது அவனுக்கு' என்று கூறி நமது இயலாமையைச் சமாதானம் செய்துகொள்கிறோம்.

உண்மை இதுவல்ல.

அவன் நல்ல-சரியான எண்ணங்களை விதைத் தான், வளர்த்தான், அறுவடை செய்கிறான். விஷயம் தெரியாதவர்கள் மனம் என்ற தோட்டத்தைப் பற்றியோ, நல்ல விதைகளின் வலிமையைப் பற்றியோ, மனத்தைப் பண்படுத்தும் முறைகளைப் பற்றியோதெரிந்து கொண்டதில்லை; கேள்விப்பட்டதில்லை; சிந்தித்ததில்லை.

Om Ravi Kumar.

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

 திருவள்ளுவர்..

Comments

Popular posts from this blog