🌷எது மோட்சம்? 🌀




நாம் அன்றாடம் ஈடுபடும் காரியங்களில், நல்லனவைகளும் இருக்கும். தெரிந்தோ, தெரியாமலோ நல்லன அல்லாத காரியங்களும் இருக்கும். 




இந்த மானிட வாழ்வில், நல்லது செய்தால் பிற்காலத்தில், மோட்ச பிராப்தி கிடைக்கும் என்பதை எல்லோருமே அறிந்திருக்கிறோம். 




மோட்சம் என்பது எங்கோ எண்ணத்திற்குப் புலப்படாத இடத்தில் இருப்பதாகவும், அங்கு சென்றடைந்து விட்டால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பேரானந்த போகம் இருக்கப்போவதாகவும் எண்ணிக்கொண்டிருக்கிறோம். 


ஆனால், மோட்சம் என்பதற்கு, காஞ்சி மாமுனி, ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா கூறும் விளக்கத்தையும் பார்ப்போம். 




'மோட்சம் என்பது செத்துப் போன பிறகு வேறு எந்த லோகத்திற்கோ போய் அனுபவிப்பது அல்ல. கைகண்ட பலனாக இந்த லோகத்தில் இருக்கும் பொழுதே நமக்குக் கிடைக்க வேண்டும். இப்பொழுது கிடைத்தால்தான் அப்பொழுதும் கிடைக்கும். 


அதற்கு, நீ, வயசு வந்தவனாக இருக்கிறபொழுது பாலகனாக இருக்கவேண்டும். குழந்தையாகப் போனவுடன் சாமியாகப் போக வேண்டும் என்று உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 





குழந்தையாக இருக்கும்பொழுது, காமம் தோன்றுவதில்லை. பயம், சோகம், குரோதம் இருக்கும். ஆனால் அவை வேறூன்றாமல் மேலெழுந்த வாரியாகத்தான் இருக்கும். 


அந்த மாதிரி நம்முடைய மனநிலை முதலில் மாறியாக வேண்டும். அப்புறம் அந்த நான்கும் இல்லாமலே போய்விட வேண்டும். 


இந்த மனநிலை நமக்கு இங்கேயே உண்டாகி விடவேண்டும். 


காமம், குரோதம் இந்த இரண்டினுள் பயம், சோகம் எல்லாம் சேர்ந்திருக்கிறது. 




காமம், குரோதம் இவற்றின் வேகம் இருக்கிறதே அதை அடக்குவது சாமான்யமாக முடியாது. அவற்றின் வேகம் நம்மை இழுத்துக்கொண்டே போய்விடும். நிரம்ப வேகமாகப் போகும் ரயிலின் பக்கத்தில் போய் நின்றால், அதன் வேகம் நம்மை இழுத்துக்கொள்வது போலத்தான் இதுவும். 


எவ்வளவு மழை பெய்தாலும், கொஞ்சம் கூட ஜலம் சொட்டாத துணிக்கு வாட்டர் புரூஃப் என்று பெயர். அதுபோல் பய புரூஃப், சோக புரூஃப், காம புரூஃப், குரோத புரூஃப் ஆக நாம் ஆகிவிட வேண்டும். 


சர்வ மங்கள மாங்கல்ய சிவே சர்வார்த்த சாதிகே! 

சரண்யே த்ரியம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே! 





இப்படி தேவி மகாத்மியத்தில், த்ரியம்பகியாக, சிவ ஸ்வரூபத்தோடு சேர்ந்த ஒரே ஸ்வரூபமாக சொல்லப்பட்டிருக்கிறது. அவளேதான் நாராயணி. 


அவளின் பாதார விந்தங்களை ஒரு மனதோடு பணிந்தால், குழந்தையான அவள், நம்மையும் குழந்தையாக ஆகும்படி செய்து, முடிவில், அசையாத மனம் உள்ளவர்களாகவும், ஆனந்தமாக எப்பொழுதும் இருக்கும் படியான அம்ருதத்தை, நமக்குக் கொடுத்து, க்ஷேமமாக இருக்கும்படியாக அனுக்கிரகம் செய்கிறாள். 





சிவனோடு ஒன்றிய சக்தியின் கடாக்ஷத்தினால் காம ஜயம், கால ஜயம், சோக ஜயம், குரோத ஜயம், பய ஜயம் எல்லாமே கிடைக்கிறது. 


அப்படிப்பட்டவர்களாக நாம் எதற்கும் அசைந்து கொடுக்காதவர்களாக இருந்து விட்டால் அதுதான் முக்தி. அதுதான் மோட்சம். 


ஆகையால், இந்த லோகத்திலேயே, நாம், ஒவ்வொரு நாளும், நமக்கு அந்த மனநிலை வந்துவிட்டதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த லோகம்தான் அதற்கு உரைகல். ஜன்மத்தின் பலன் ஜனன நிவ்ருத்திதான்’


🍁 நன்றி சங்கரநாராயணன்

Comments

Popular posts from this blog