🌷ஞானியின் அடையாளம் என்ன ? 🍂




 எந்தவித அடையாளமுமற்று இருப்பதுதான் ஞானியின் அடையாளம். இருப்பினும் விளக்கம் தேவைப்படுவதால் நமது நிலையில் நின்று வேறுபடுத்தி யோசித்துப் பார்க்கும் பொழுது தானம், தவம், தன்னடக்கம், சத்தியம், சாந்தம், பொறாமையின்மை, பேராசையின்மை, 

மன்னிக்கும் மனோபாவம், கருணை, இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதும் பக்குவம், செயல்களில் நேர்த்தி, உறுதி இவைகள்தாம் ஞானியின் அடையாளங்கள் என்று சொல்லாம். 




ஞானம் என்றால் அறிவில் தெளிவு என்பதுண்டு. அந்த அடிப்படையில் யோசித்துப் பார்க்கும் பொழுது நாம் புற விஷயங்களில் கூர்த்த மதி படைத்தவர்களை ஞானிகள் என்று அடையாளம் கொள்கிறோம். உண்மையில் அது விஷய ஞானமேயாகும். உண்மையான ஞானம் என்பது உண்மையில் மிகவும் சாதாரணமான விஷயம்தான். நாம் யார் ? நாம் எங்கிருக்கிறோம் ? நமது கடமையென்ன ? இந்த மூன்றையும் தெளிவாக உள்ளது உள்ளபடி உணர்ந்தோரே ஞானிகள். 




மௌனம் ஞானியின் அடையாளமில்லையா ? 


பேச முடியாதவர்கள் கூட மௌனமாக இருப்பது போலதான் தோன்றும். மௌனம் என்பது பேசாமல் இருப்பது மட்டுமல்ல. மனம், வாக்கு, காயம் மூன்றையும் தூய்மையாக தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதேயாகும். அறியாமையோடு ஆயிரம் ஜபதபங்களைச் செய்வதைக் காட்டிலும், அறிவோடு மௌனமாக இருப்பது சிறந்ததல்லவா !?! 




விலங்குகள் கூட பேசுவதில்லை. ஆனால் அவை தூங்கும் பொழுது கூட சலனமடைந்து கொண்டேதான் இருக்கின்றன. மனிதன் விலங்குகளை விட மேலானவன் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது சொல்லுங்கள் !!? தூங்கும் பொழுது மட்டுமல்ல, விழித்திருக்கும் பொழுதும் கவனமாகச், சலனமின்றி இருப்பதுதான் ஞானம். 


நாம் யார் ? என்னவாக இருக்கிறோம் ? 

எங்கிருக்கிறோம் ? என்பதை உள்ளது உள்ளபடி உணர்ந்தவர்களுக்கு எந்தவிதச் சலனத்திற்கும் வேலை இல்லையே !!! ஆக மௌனம் என்பது ஞானியின் இயல்பாக உள்ளது என்பது தெளிவாகிறது. எனவே மௌனத்தையும் ஞானியையும் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. 




ஞானிக்கு தன் விருப்பங்கள் என்று எதுவும் இருக்காதா ? 


விருப்பம் போல வாழ்வது என்பது விலங்கு வாழ்க்கை. எது நல்லது ? எது கெட்டது ? எதைச் செய்யக் கூடாது ? நாம் செய்ய வேண்டியது என்ன ? இந்தத் தெளிவுதானே ஞானம். ஞானம் எல்லோருக்கும் இருக்கிறது. அந்த ஞானம்தான் ஆறாவது அறிவாக, உள்ளுணர்வாக இருந்து கொண்டு இதையெல்லாம் உணர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த ஞானம்தான் மற்ற ஏனைய ஜீவராசிகளுக்கும் நமக்கும் உள்ள தொடர்புகளை, வித்தியாசங்களை உணர்த்துகிறது. 


அப்படியிருக்க விருப்பம் போல வாழ்வது என்பது விலங்கைப் போல வாழ முயற்சிப்பதாக ஆகி விடாதா ? வெறும் அனுபவ அறிவுதான் விருப்பம் போல வாழத் தூண்டும். அனுபவம் வாழ்க்கைக்குத் தேவைதான். ஆனால் அனுபவங்கள் மட்டுமே நம் குறிக்கோளை எட்டுவதற்கு உதவிடாது. அனுபவ அறிவோடு கூட பகுத்தறிவும் இணைந்து செயலாற்ற வேண்டும். அதுவே ஞானம். அத்தகைய ஞானமுள்ளவர்கள் மனதின் விருப்பங்கள் அனைத்திற்கும் செவி கொடுக்க மாட்டார்கள். 


எல்லோருக்கும் ஞானமிருக்கிறது என்றால், ஏன் மனிதர்கள் துன்பப்படுகிறார்கள் ? 


எது ஞானம் ? உள்ளதை உள்ளபடி உணர்வதுதான் ஞானம். ஞானம் இருக்கிறது !! ஆனால், அது உணர்வுக்கு வரவில்லை. பணம் கணக்கில் இருக்கிறது. ஆனால், அது கைக்கு வந்தால்தானே தேவைக்கேற்ப செலவு செய்ய முடியும் ? சரி நாம் ஞானத்தை எதனால் இழந்து போகிறோம் ? அல்லது அடைய முடியாமல் துன்பப்படுகிறோம் ? 




நமது உடலும், மனமும், உயிரும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. ஒன்றின் இருப்பை, நிலையை ஒன்றுக்கொன்று அவை ஊக்குவிக்கின்றன. ஒன்று பலவீனமடைந்தாலும் மற்ற இரண்டும் பலவீனமடைகின்றன. இந்த முக்கியமான தொடர்பை, இணைப்பை புரிந்து கொள்ளாமல், மனதையும், உடலையும், உயிரையும் தனித்தனியாகப் பிரித்து, நமது ஆளுமைத் தனைமையை அழித்து விடக் கூடிய உடலோடு மட்டும் நம் புத்தியை செலுத்துகிறோம். நாம் இந்த உடல் மட்டும்தான் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறோம். இதனால்தான் ஞானம் நம் அறிவுக்கு எட்டாமல் போய் விடுகிறது. 


''ஸ்வஸ்த்யா'' என்று வட மொழி ஸ்லோகங்களில் ஒரு வர்த்தை உண்டு. ஸ்வஸ்த்யா என்றால் ''நீ நீயாகவே இரு'' என்பதுதான் பொருள். நீ நீயாவே இரு என்றால், நீ எந்த வித அஞ்ஞானத் தடைகளுமற்ற, முழு ஞானத்தை உடையவனாக இரு என்பதுதான் உள்ளார்ந்த கருத்து. ஆனால், நாம் என் செய்கிறோம் ? அழியும் இந்த தேகத்தோடு அல்லவா நம் அறிவைப் பிணைத்து வைத்துக் கொண்டுள்ளோம் ? இந்த தேக அபிமானத்தை விடுத்து, மூன்றையும் சமநிலையில் இணைத்து, அறிவைச் செலுத்தும் பொழுதுதான் ஆத்ம ஞானம் சுடர் விட்டுப் பிரகாசிக்கும். அந்நிலையில் இன்பமுமில்லை, துன்பமுமில்லை. ஆனந்தம் மட்டுமே.

🌷நன்றி ஓம்

Comments

Popular posts from this blog