🌿🌿விபூதியின் திருக்கதை! 🌿🌿🌿




நிரஞ்சனா பர்னாதன் என்பவன் சிறந்த சிவபக்தன். சிவனாரைக் குறித்து அவன் செய்யும் தவம் நெடுநாள்களுக்கு நீடிப்பது உண்டு.  

ஒருமுறை சிவனாரைக் குறித்துக் கடும் தவத்திலிருந் தவனுக்கு, விதி வசத்தால் கடுமையாகப் பசிக்க ஆரம்பித்தது. ஆகவே, தவம் கலைந்து கண்ணைத் திறந்தான். அப்போது அவனைச் சுற்றிலும் சிங்கங்களும், புலிகளும், பறவைகளுமாகப் பல உயிரினங்கள் காவலுக்கு இருந்ததைக் கண்டான். 




பசி வாட்டத்துடன் திகழ்ந்தவன்முன், பழங்களைப் பறித்துவந்து போட்டன பறவைகள். ‘இது ஈசனின் கருணையே’ என்று மகிழ்ந்த சிவபக்தன், கனிகளைச் சாப்பிட்டுவிட்டுத் தவத்தைத் தொடர்ந்தான். இப்படியே பல வருடங்கள் கழிந்தன. 

ஒருவாறு அந்தத் தவத்தை முடித்துக்கொண்டு சிவவழிபாட்டைத் தொடங்கினான். ஒருநாள் தர்பைப்புல்லை அறுக்கும்போது அவன் கையில் கத்திபட்டு ரத்தம் கொட்டியது. ஆனால், அவனுக்கோ எந்தப் பதற்றமும் இல்லை. ஆனால், குழந்தைக்கு ஆபத்தென்றால் தாய் பதறுவதுபோல அந்த ஈசன் பதறிப்போனார். 

உடனடியாக ஒரு வேடனாக வடிவெடுத்து ஓடோடி வந்தார். பக்தன் இருக்கும் இடத்துக்கு வந்தவர், அவனின் கையைப் பிடித்துப் பார்த்தார். என்ன ஆச்சர்யம்… அவர் தொட்டவுடன் ரத்தம் சொட்டிய இடத்தில் இருந்து சாம்பல் கொட்ட ஆரம்பித்தது. 




வந்திருப்பது தாயுமாகி தண்ணருள் புரியும் அந்த சர்வேஸ்வரனே என்பதைச் சடுதியில் புரிந்து கொண்டான் பக்தன். ஆகவே அவரிடம், “ரத்தத்தை நிறுத்திச் சாம்பலைக் கொட்டச் செய்த தாங்கள் நான் வணங்கும் சர்வேஸ்வரனே என்பதை அறிவேன். இந்த அடியேனுக்குத் தங்களின் சுய உருவைக் காணும் பாக்கியம் இல்லையா’’ என வேண்டினான்.

மறுகணம் சுயரூபத்தில் தரிசனம் தந்தார் சிவபெருமான். அத்துடன், “உனக்காகவே இந்தச் சாம்பலை உருவாக்கினேன். மகிமைகள் நிறைந்த இந்தச் சாம்பல் இன்று முதல் `விபூதி’ என்று அழைக்கப்படட்டும். உனது அருந்தவத்தாலும் வழிபாட்டாலும் விபூதி உருவானது. அக்னியை எதுவும் நெருங்க முடியாததைப்போல் விபூதியை அணிந்து கொள்பவர்களின் அருகில் துஷ்ட சக்திகள் நெருங்காது. விபூதி என் ரூபம்’’ என்று அருள் புரிந்தார்.

விபூதியின் மகிமையைச் சொல்லும் திருக்கதை இது. நாமும், அளவில்லா நன்மைகளை அளிக்கவல்ல விபூதியை நாள்தோறும் அணிந்து நாதன் நாமத்தைப் போற்றி வழிபடுவோம். வினைகள் யாவும் நீங்கப்பெற்று வாழ்வில் வளம் பெறுவோம்.

🌿 நன்றி சங்கரநாராயணன்



Comments

Popular posts from this blog